சட்டசபை முன் தொடர் மறியல் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு தினமலர் செய்தி
கடலூர்:"தமிழக அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி, சென்னையில் சட்டசபை வளாகம் முன், வரும் 17ம் தேதி முதல் தொடர் மறியல் நடத்தப்படும்' என, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் அப்துல் மஜீத் கூறினார். கட லூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக கல்வித் துறைக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம், பள்ளி கூடுதல் கட்டடங்கள் கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு, மத்திய அரசு 10 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆரம்பக் கல்வி பாதிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில், பதிலி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.மெட்ரிக் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இலவச கல்வியை உறுதி செய்ய வேண்டும். மெட்ரிக் பள்ளி அனைத்தையும் அரசே ஏற்று, அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் 17ம் தேதி முதல் சட்டசபை வளாகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் 375 வட்டாரங்கள் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்து தினமும் ஐந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பர்.இவ்வாறு அப்துல் மஜீத் கூறினார்.
நன்றி : தினமலர் 10.02.2011