சிபிஎஸ்இ நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுமத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) இத்தேர்வை நடத்துகிறது.


அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நாடு முழுவதும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


எனவே, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் தகுதித் தேர்வு கொண்டு வரப்படுகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வை (Central Teacher Eligibility Test -CTET) மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்துகிறது. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபேத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும்.


தனியார் பள்ளிகளும் தங்களது பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்களுக்கு இத்தேர்வைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களைச் சேர்க்க மாநில அரசு தனியே தகுதித் தேர்வை நடத்தலாம்.


இத்தேர்வை நடத்தவில்லை என்று முடிவு செய்தால், மத்திய அரசு நடத்தும் இந்தத் தகுதித் தேர்வை, ஆசிரியர் தேர்வுக்குப் பயன்படுத்திக் கொள்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஏழு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த தகுதித் தேர்வை விண்ணப்பதாரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.


தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தங்களது மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள இத்தேர்வை மீண்டும் எழுதவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை பணி புரிய விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இரண்டாவது தாளை எழுத வேண்டும்.


ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்தத் தகுதித் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம்.


ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஜனவரி 29ம் தேதி காலை 10 மணியிலிருந்து 11.30 மணி வரை நடைபெறும்.


இரண்டாம் தாள் அதே நாளின் பிற்பகல் 1 மணியிலிருந்து 2.30 மணி வரை நடைபெறும். கேள்வித்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும்.


ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, காரோ, குஜராத்தி, கன்னடம், காஸி, மலையாளம், மணிப்புரி, மிஜோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, திபேத்தியன், உருது ஆகிய மொழிகளில் ஏதேனும் இரண்டு மொழிகளை விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.

முதல் தாள் தேர்வு:
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும்.


குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை, மொழி-1, மொழி-2, கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் கேட்கப்படும்.


ஆறு வயதிலிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான கல்வி உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை பகுதியில் கேள்விகள் இருக்கும்.


மொழி-1 பிரிவின் கீழ் எந்த மொழியில் மாணவர்களுக்குக் கற்பிக்கிறோமோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும்.


மொழி-2 பிரிவில் மற்ற மொழித் திறன்கள் சோதனை செய்யப்படும. அதாவது, மொழி அடிப்படைகள், கம்யூனிக்கேஷன், காம்ப்ரிகென்ஷன் எலிஜிபிலிட்டி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேள்விகள் இருக்கும்.


கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடங்களில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், பாடங்களைப் புரிந்துகொண்டு கற்பிக்கும் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ அல்லது என்சிஇஆர்டி பாடத்திட்டத்திலிருந்தே ஆசிரியர்களுக்கான கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் தாள் தேர்வு:
ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணிக்கான தேர்வு இது. இதில் 150 கேள்விகள் இருக்கும். இந்தத் தேர்வுக்கும் ஒன்றரை மணி நேரம் வழங்கப்படும்.


குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறைகள் குறித்து 30 கேள்விகள் கேட்கப்படும். 11 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.


இதுதவிர, மொழி-1, மொழி-2 ஆகிய பாடங்களிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். மொழி-1 பிரிவில் எந்த மொழியில் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்களோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும். மொழி-2 பிரிவில் மற்ற மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும்.


இந்த மூன்று பிரிவுகளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயமானது. கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு கணிதம், அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும்.


சமூக அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு சமூக அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும்.


மற்ற ஆசிரியர்கள் இந்த இரண்டில் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியதிருக்கும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலே கேள்விகள் அமையும்.

ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு:
சீனியர் செகண்டரி (பிளஸ் டூ) தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் (இணையான கல்வி டிப்ளமோ) இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும்.

என்சிடிஇ விதிமுறைகளின்படி, சீனியர் செகண்டரி தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தொடக்கக் கல்வி டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.


சீனியர் செகண்டரி தேர்வுகளில் தொடக்கக் கல்வி இளநிலைப் பட்ட (பி.இஎல்.எட்.) வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சிறப்புக் கல்வியில் டிப்ளமோ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு தொடக்கக் கல்வி டிப்ளமோ படிப்பில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு:
பட்டப் படிப்பை முடித்த பிறகு, தொடக்கக் கல்விக்கான டிப்ளமோ படிப்பில் (அல்லது அதற்கு இணையான) இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.


பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பிஎட் படிக்கும் மாணவர்களும் என்சிடிஇ விதிமுறைகளின்படி பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பிஎட் படிக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.


சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று, நான்கு ஆண்டு தொடக்கக் கல்வி இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.


சீனியர் செகண்டரி தேர்வுகளில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று பிஏஎட், பிஎஸ்சிஎட் நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ஓராண்டு பிஎட் (சிறப்புக் கல்வி) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இறுதி ஆண்டு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


தாழ்த்தப்பட்டோர்,. பழங்குடியினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண்களில் 5 சதவீத விலக்கு உண்டு. கல்வி தொடர்பான பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும். பிஎட் (சிறப்புக் கல்வி) படிப்பு, இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்சிஐ) அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.


இதுபோல, என்சிடிஇ விதிமுறைகளின்படி ஆசிரியர்களின் தகுதிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட இத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தகுதி விவரங்கள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பத்தையும் தகவல் விவர அறிக்கையையும் பெற ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் ரூ.250. குறிப்பிட்ட சில வங்கி கிளைகளிலும் குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களிலும் இந்த விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் உள்ள குறிப்பிட்ட சிண்டிகேட் வங்கிக் கிளைகளில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைத் தபால் மூலமும் ஆன்லைன் மூலமும் அனுப்பக் கடைசி தேதி நவம்பர் 30. அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாசலப் பிரதேசத்தில் லாஹ்ல், ஸ்பிட்டி மாவட்டங்கள், சம்பா மாவட்டத்தில் பாங்கி சப் டிவிஷன் பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத் தீவுகள் போன்ற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் டிசம்பர் 7ம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.பாடத்திட்டம் மற்றும் இதர விவரங்கள் இந்தத் தகுதித் தேர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP