அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி
"அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், ஆங்கில வழிக் கல்வி துவங்கி, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என, துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த புளியம்பட்டி பி.ஏ., இன்ஜினியரிங் கல்லூரி அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற துவக்கக் கல்வி இயக்குனரக இணை இயக்குனர் ராமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மட்டுமின்றி வகுப்பறை, கழிப்பிடம், குடிநீர் ஆகிய வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஒரு சில பள்ளிகளுக்கு, போதுமான இடவசதி இல்லாததால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்.
ஸ்மார்ட் கிளாஸ் உண்டு
பள்ளிகளுக்கு, டிவி, டிவிடி பிளேயர் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே ஸ்மார்ட் கிளாஸ் போன்ற கல்வி கற்றுத் தரப்படும். மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழகத்தில், நடப்பாண்டில் 56 ஆயிரத்து 143 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில், புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி, தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், தேர்ச்சி அடையும் ஆசிரியர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலம்
மேலும், 810 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் வேலை வாங்குவதைத் தவிர்க்கவும், பள்ளியிலுள்ள அடிப்படை வசதிகளை சரியான முறையில் பராமரிக்கவும், அந்தந்தப் பகுதி உதவி துவக்கக் கல்வி அலுவலர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில், ஆரம்ப நிலையில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வருவதற்காக நிபுணர் குழு அமைத்து ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில், நடுநிலைப் பிரிவு போன்று, ஆரம்ப நிலையிலேயே ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டு, தனியார் பள்ளிக்கு இணையாக சீருடை வழங்கப்படும்.
இதன்பொருட்டு, புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு, இணை இயக்குனர் ராமராஜ் கூறினார்.
நன்றி-தினமலர்.