சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் : ஐகோர்ட்

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு சங்கத்தின் செயலர் முருகதாஸ் தாக்கல் செய்த மனுவின் விபரம்:

ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பரில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. கட்டாயக் கல்விபெறும் உரிமை சட்டத்தின் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமனத்தில், பலருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் முடித்துவிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களும், தகுதித் தேர்வை எழுத வேண்டும் எனக் கூறப்படுகிறது.
எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு, ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு தகுதித் தேர்வை நிர்ணயிக்கும் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். மாநில அளவிலான வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில், எங்கள் சங்க உறுப்பினர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்திலிருந்து அரசு விலக முடியாது
மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் திக்விஜய பாண்டியன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்படுபவர்கள் யாரும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இவர்கள் பிரச்சினையை, சங்கம் எப்படி எடுக்க முடியும் என தெளிவாக இல்லை. பதிவு செய்யப்பட்ட அமைப்புதான் சங்கம். பாதிக்கப்படுவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தால் ஒழிய, இந்த விஷயங்களில் கோர்ட் முடிவெடுக்க முடியாது.
எனினும், குறிப்பிட்ட முறையிலான தேர்வை, பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட சட்டம் நிர்ணயிக்கும்போது, அந்த நடைமுறையில் இருந்து மாநில அரசு விலகிச் செல்ல வாய்ப்பில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வை, பல்கலைக்கழக மான்ய குழு நிர்ணயித்துள்ளது. இது செல்லும் என, சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள உத்தரவுகள், தமிழக அரசின் அரசாணையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை, தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு பணியில் நியமிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்களை வடிகட்டுவது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.
காளான் நிறுவனங்களால் தான் இந்த நிலை
மாநிலம் முழுவதும் காளான்கள் போல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், கல்லூரிகள் முளைத்திருப்பதால், தேர்வு தரத்தை கொண்டு வருவது தவிர்க்க முடியாதது. பழைய கொள்கைப்படி, தேர்வு முறைப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தங்களை வேறு விதமாக கருத வேண்டும் என, மனுதாரர் கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

  © என் பக்கம் செ. அருள்செல்வம் - www.arulselva.blogspot.com Thank you visit again

Back to TOP