அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் சில விவரங்கள் :
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான குழுக்களின் மூலம் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆசிரியர்களை நியமிக்கும். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இவர்களது பணி தாற்காலிகமானது என்றும் அரசு அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
100 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புவரை இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மொத்தமுள்ள 16,549 பணியிடங்களில் கலைப்படிப்புகளுக்காக 5,253 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் உடற்கல்விக்காக 5,392 பணியிடங்களும், கைத்தொழில் படிப்புகளுக்காக 5,904 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பரிந்துரைகளை "அனைவருக்கும் கல்வி இயக்கம்' அரசுக்கு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த பிறகு, இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான விதிமுறைகள் விவரம்:
தேர்வுக் குழு உறுப்பினர்கள்:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், பகுதி நேர ஆசிரியர் தேர்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) உறுப்பினர் செயலராக இருப்பார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் உடற் கல்வி நிபுணர், மாவட்ட அளவிலான கலைப்படிப்புகளில் நிபுணர், இசை, தோட்டக்கலை, கம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளிட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க அந்தந்தத் துறை நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவர்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும், இடைநிலைப் பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரிகளாக இருப்பார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வரவேற்கப்பட வேண்டும்.
தேர்வுக்குழுவினர் நேர்முகத்தேர்வின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
உள்ளூர் விண்ணப்பதாரர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
இதில் 10 சதவீத ஆசிரியர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். இந்தப் பட்டியல் ஓர் ஆண்டுவரை இருக்கும்.
பகுதி நேர ஆசிரியர் தேர்வுப் பட்டியலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக தகவல்பலகை, பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும்.
இதுதொடர்பான பதிவேட்டை தனியாகப் பராமரிக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர் நியமனம் என்பது இந்தத் திட்டம் அமலில் உள்ள வரையிலான தாற்காலிக பணி நியமனம் மட்டுமே ஆகும்.தேவைப்பட்டால் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
அரசு விடுமுறை தினங்கள், ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அவர்களுக்கு வேறு விடுமுறைகள் கிடையாது.அவர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கப்படாது.
இந்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் கற்பித்தல் பணி வழங்கப்படும். அவர்களுக்கான சம்பளம் "அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் கிராம கல்விக் குழுக்களுக்கு வழங்கப்படும். அந்தக் குழுக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சம்பளத்தை வழங்குவார்.
இந்தப் பகுதிநேர ஆசிரியர்களின் சேவையை அருகில் உள்ள 4 பள்ளிகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும்போது அதற்குரிய சம்பளத்தை அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
Schedule for posting of Part-time Instructors
1.Advertising in the Dailies
1.12.2011 to 10.12.2011 (10days)
2.Last date for receiving of application form
15.12.2011 (5 days)
3.Scrutiny of received application form
16.12.2011 to 18.12.2011 (3 days)
4.Sending of call letters
19.12.2011 - 25.12.2011 (7 days)
5.Conducting of interview and Selection of Candidates
26.12.2011 to 15.01.2012 (21 days)
6.Sending of appointment order, posting in the notice board and website
16.1.2012 to 20.01.2012 (5 days)
7.Date of Joining
on or before 27.01.2012 (7 days)
8.Sending of final report to SPO
30.01.2012 (3 days)